வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் கொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் இன்று நடக்கும் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க பருத்தித்துறை நீதிவான் மன்று மறுத்து விட்டது. அதேநேரம் போராட்டத்துக்குப் போதிய பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியது.
பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நாட்டின் புகழுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி பருத்தித்துறை நீதிமன்றத்தில் நெல்லியடிப் பொலிஸ் பொறுப்பதிகாரி மனு ஒன்றை நேற்றுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு சட்டமுறைப்படி செய்யப்பட்டதல்ல என்று நிராகரித்த பருத்தித்துறை நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், அதனடிப்படையில் உத்தரவு எதனையும் பிறப்பிக்க சட்ட ஏற்பாடுகள் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
அதேநேரம் பொலிஸார் மன்றுக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கவனவீர்ப்புப் போராட்டத்தைக் குழப்ப தீய சக்திகள் எவையும் முயலலாம் என்ற நியாயமான சந்தேகம் மன்றுக்கு எழுந்திருப்பதால், அப்படி எதுவும் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டத்துக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறும் நீதிவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
பருத்தித்துறை நீதிவான் மன்றில் மாலை 5 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் பொலிஸாரின் மனு தொடர்பிலான விசாரணை நடைபெற்றது. நெல்லியடியில் தமிழ்த் தேசிய முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று நேற்று மாலை பொலிஸார் திடீரென மனு ஒன்றை நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
இந்தப் போராட்டத்தால் அரச சொத்துக்களுக்கும் பொது மக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளையும் என்றும் பொலிஸார் தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன், இன்றைய தினம் ஆடியமாவாசையை ஒட்டி நெல்லியடி வர்த்தகர்கள் தமது கடைகளை அடைப்பது வழமை என்றும்
ஆனால், இதனையும் இந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாகக் காட்டி தவறான தகவல்களைச் சர்வதேச ரீதியில் பரப்பி இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தமக்குப் புலானய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். இவற்றின் அடிப்படையில் போராட்டத்துக்குத் தடை விதிக்கும்படியும் கோரியிருந்தனர்.
தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பில் மன்றில் முற்பட்டிருந்த சட்டத்தரணிகளான யோ.சத்தியநாதன், சி.கந்தசாமி, வி.மணிவண்ணன் ஆகியோர் இதனை எதிர்த்தனர். கவனயீர்ப்புப் போராட்டம் ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும் என்று தெரிவித்த அவர்கள், போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கோ தனியார் சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏதும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் உறுதியளித்தனர்.
ஜனநாயக ரீதியில் அமைதியாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைய இலங்கை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கொண்டிருக்கிறான் என்பதை அரசமைப்பின் உறுப்புரை 14 உறுதிப்படுத்துகின்றது என்பதை எடுத்து ரைத்தனர்.
அதேநேரம், கொழும்பில் லிப்டன் சதுக்கம், கோட்டை ரயில் நிலையம், விகாரமா தேவி பூங்கா, ஹை பார்க் கோர்னர் ஆகிய இடங்களில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெறுகின்ற போது ஏன் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்த முடியாது என்றும் அவர்கள் மன்றில் கேள்வி எழுப்பினர்.
“தெற்கில் ஒரு சட்டம் வடக்கில் ஒரு சட்டமா நடைமுறையில் உள்ளது?” என்றும் கேள்வி எழுப்பினர்.
ஜனநாயக ரீதியாக நடக்கும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலமே நாட்டின் நற்பெயருக்குக் உலக அரங்கில் களங்கம் ஏற்படுத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், பொலிஸார் சமர்ப்பித்த மனு சட்ட மதிப்பைக் கொண்டிராத காரணத்தால் அதன் மீது எந்த உத்தரவையும் இடமுடியாது என்று தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பொலிஸார் ஒரு வழக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யும்போது, குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இருந்தால் “பி” அறிக்கை தாக்கல் செய்வார்கள். இல்லையேல் “ஏ” அறிக்கை மூலம் வழக்குகள் தாக்கல் செய்யப்படும். ஆனால், இவற்றில் எதுவுமில்லாமல் ஒரு வெள்ளைத் தாளில் இந்த முறைப்பாடு மன்றின் முன் வைக்கப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டக்கோவையின் அடிப்படையிலோ அன்றி குற்றவியல் சட்டக்கோவையின் அடிப்படையிலோ இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பொறுப்பதிகாரி, போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியிருக்கிறார். போராட்டத்தில் அசம்பாவிதம் நிகழலாம் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி நம்பினால் அவர் தனது சத்தியக் கடதாசியை அணைத்திருக்க வேண்டும். அதனையும் செய்யவில்லை. அசம்பாவிதம் நிகழக்கூடியதற்கான ஆதாரம் ஒன்றையாவது சமர்ப்பிக்கவும் இல்லை.
இந்த நிலையில், பொலிஸார் மன்றின் முன்வைத்துள்ள வெள்ளைத் தாள் முறைப்பாட்டின் அடிப்படையில் எந்தக் கட்டளையையும் இடுவதற்குச் சட்டத்தில் இடமில்லை என்பதால் பொலிஸார் கேட்டபடி போராட்டத்துக்கு என்னால் தடைவிதிக்க முடியாது.
இருப்பினும், எனது நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் எதுவித அசம்பாவிதங்களும் வன்முறைகளும் நடக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டவர் என்ற அடிப்படையில் பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்த தகவல்கள் குறித்து மன்று கவன் கொண்டுள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த புலானய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஏதோ ஒரு தீய சக்தி இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தி, இலங்கை நாட்டில் உயரியதும் உன்னதமானதுமான அரசமைப்பு மக்களுக்கு வழங்கும் உரிமைகளைத் தடுப்பதற்கும் போராட்டம் நடக்காமல் செய்வதன் மூலம் நாட்டின் அரசமைப்புக்கு எதிராகச் செயற்படுதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற நியாயமான அச்சம் இந்த மன்றுக்கு ஏற்படுகிறது.
எனவே நடக்க இருக்கும் கவனவீர்ப்புப் போராட்டத்தின்போது பொது மக்களின் சொத்துக்களுக்கும் அரச சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்திலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணமும் பொலிஸார் போராட்டத்துக்குப் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று இந்த மன்று அறிவுறுத்துகின்றது என்று தெரிவித்தார்.
நெல்லியடி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் ; இராணுவம் மிரட்டல்
நெல்லியடியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என மக்களுக்கு இராணுவம் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை நோக்கிச் செல்லும் போக்குவரத்து பஸ்கள் அனைத்தும் வல்லை இராணுவ காவலரணில் சோதனைக்குட் படுத்தப்படுத்தப்படவதாகவும், இதன்போது நெல்லியடியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என படையினர் மக்களிடம் மிரட்டும் பாணியில் அறிவித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
வல்லை இராணுவ காவலரணில் போக்குவரத்து பஸ்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டு பயணிகளிடம் அட்டையாள அட்டைகளும் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்படுவதாக சம்பவத்தை எதிர்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை அட்டையாள அட்டைகள் கொண்டுவராத பயணிகள் கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
நெல்லியடியில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது அதில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் அங்கு தாக்குதல்கள் நடாத்தப்படவுள்ளது என அவர்கள் பயணிகளிடம் தூய தமிழில் கூறிவருவதாக தெரியவருகின்றது.
இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நெல்லியடி பஸ் நிலையப்பகுதியில் நில ஆக்கிரமிப்பு மற்றும் நிமலரூபனின் படுகொலை ஆகியன தொடர்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நெல்லியடிப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பொலிஸ் பிரசன்னமும் காணப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவினரது நடமாட்டமும் அதிகமாக இருப்பதாக தெரிவியவருகின்றது.