யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் வட மாகாண ஆளுநர் அனுப்பி வைத்த கடிதம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களினால் வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினால், மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு கண்டனம் வெளியிட்டும் நீதி வேண்டும் எனக் கோரியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.
இந்த மகஜருக்கான பதில் கடிதத்தை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு சிங்கள மொழியில் மாத்திரமே அனுப்பி வைத்துள்ளார்.
இது தமிழ் மாணவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதுடன், நீங்கள் எழுதிய இந்தக் கடித்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் எனக் குறிப்பிட்டு வட மாகாண ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.