யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதனைக் கண்ணால் கண்ட மாணவன் கஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரீ.வி பதிவுகள் மற்றும் ஏனைய தகவல்கள் மூலம் இவ்விடயம் வெளிவந்தவண்ணமுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களை கொலைசெய்துவிட்டு அதனை விபத்தென காண்பிக்க முற்பட்டமையானது மிகவும் மோசமான விடயமென சுட்டிக்காட்டிய ஸ்ரீதரன், நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலையின் ஒரு பகுதியாகவே இச் சம்பவமும் இடம்பெற்றுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006ஆண்டு இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட சுலக்ஷனின் சகோதரன் ஒருவர் இன்னும் மீள வரவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையுடன் வாழும் இவ்விரு மாணாக்கரின் குடும்பமும் கல்வியை மாத்திரமே நம்பி வாழ்ந்துள்ளது. இந்நிலையில், பொலிஸாரின் கொடூரமான செயலால் இன்று இரு குடும்பங்களும் நடுத்தெருவிற்கு வந்துள்ளதென ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கோர இந்த நாட்டில் நல்ல மனிதர்களே இல்லாமல் போயுள்ளனர் எனத் தெரிவித்த ஸ்ரீதரன், சம்பவத்தை மூடிமறைப்பதோடு, மீண்டும் இனவாதத்தை துண்டும் வகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சில அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் அமைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் இளைஞர்கள் வன்முறையின் பால் இழுக்கப்படுவதற்கு பொலிஸாரின் செயற்பாடுகளே காரணமாக அமைந்துள்ளதென்பது, கடந்த காலத்தில் இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை, தமிழாராய்ச்சி மாநாட்டின்போது 9 பேர் கொலைசெய்யப்பட்டமை என்பன ஆதாரங்களென ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடக்கு – கிழக்கில் சுமார் 150,000 இராணுவத்தினரும், எண்ணற்ற பொலிஸார், கடற்படை எனக் குவிக்கப்பட்டுள்ள இக் காலகட்டத்திலேயே வடக்கில் வாள்வெட்டும், கஞ்சா பாவனையும் அதிகரித்து காணப்படுகின்றதெனவும், நீதித்துறை தன் செயற்பாட்டை இழந்து செல்கின்றதென்றும் ஸ்ரீதரன் குறிப்பிட்டதோடு, கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்வாறு நடைபெறவில்லையென குறிப்பிட்டார். இந்நிலையில் மக்கள் இவற்றை நினைத்து மிகவும் மனவேதனையுடன் காணப்படுவதாக ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.