Ad Widget

‘‘என் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்’’; கமல்

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை கருத்தில்கொண்டு, என் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கமல்ஹாசன்

கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அங்கு பட வேலைகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். 2 மாதங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் மாடியில் இருந்து இறங்கியபோது, படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார்.

பூரண குணமடைந்த பின்னர் தற்போது வீட்டில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் விசாகப்பட்டினத்தில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ளார். இந்தநிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை அடுத்த மாதம் (நவம்பர்) 7–ந் தேதி பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:–

நற்பணி இயக்க தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்–அமைச்சர் உடல்நலம் இவ்வாறு இருக்க, என் பிறந்தநாள் விழாக்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல, ‘தொடர் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்’ என்று ‘டுவிட்டரில்’ கமல்ஹாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts