மாணவர்களின் கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் எனபல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரியுள்ளது அவர்களது அறிக்கை வருமாறு
கடந்த வெள்ளிக்கிழமை(20-10-2016) இரவு கொக்குவிலில் இரண்டு யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மூலம் கொல்லப்பட்டமையானது எமக்கும் யாழ் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தினையும் வேதனையையும் தருகின்றது. நல்லாட்சி அரசு என்கின்ற பெயரில் ஆட்சி நடாத்திவருகினற அரசும் அரச நிர்வாகமும் தமிழ்மக்கள் மற்றும் அவர்கள் உயிர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின்மையையும் அலட்சியத்தன்மையையும் இச்சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது. இச்சம்பத்தில் உயிரிழந்த மாணவர்களிற்கு எமது அஞ்சலியினை செலுத்துவதோடு மாணவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர்களது குடும்பத்தினரதும் நண்பர்களினதும் துயரங்களை பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பகிர்ந்து கொள்கிறது.
சட்டத்தின் காவலர்கள் என கூறிக்கொள்பவர்களே இக்கொடூர கொலைகளை புரிந்தது மட்டுமல்லாது, சம்பவம் வெளிப்படையாக தெரிந்திருந்த போதிலும், அதனை மூடிமறைத்து விபத்தினால் ஏற்பட்ட மரணம் என சம்பவங்களை சோடிக்க முற்பட்டமை மிகப்பாரதூரமான குற்றச்செயல், வெளிப்படையான ஒரு சம்பவத்தையே மூடிமறைக்கமுற்பட்ட பொலிஸாரின் இச்செயற்பாடு, அவர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
எனவே இச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக சமூகம் என்கின்ற வகையில் ஊழியர் சங்கத்தினராகிய நாங்கள் பல்கலைக்கழக மாணவர் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பவர்களோடு இணைந்து துரிதமான, சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, நியாயமான விசாரணகளின் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு குற்றவாளிகள் தண்டனைக்குட்படுத்தப்படல் வேண்டும் என்பதையும் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, இனிவரும் காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களது பாதுகாப்பு, எதிர்காலம் என்பன உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்பதையும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதற்கு விரைந்து நடவடிக்கைகள் தேவை என்பதையும் வலியுறுத்துகின்றோம்