யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் உட்பட தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் கவலைகளையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த மாணவர்கள் இருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தோடு தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்தச் சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகைளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் மா அதிபரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் பொலிஸ் மா அதிபரோடு தொடர்பு கொண்டு, தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார். துரித கதியில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.