இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அழைப்பாணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்ட் கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி நீதிமன்றில் விடுத்த கோரிக்கை ஒன்று தொடர்பிலேயே, தில்ருக்ஷியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்திய சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கோரி நிசங்க சேனாதிபதி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார், எனினும் அவரது கடவுச்சீட்டு அவர்மீது தொடரப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளில் ஒன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விளக்கம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது பதவி இராஜினாமா தொடர்பில் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முடிவை இன்று அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்திய விஜயத்தில் ஈடுபட்டிருந்ததால் தில்ருக்ஷி டயஸினால் நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts