உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது.
இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர்.
அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும் வேட்டைக்கு செல்லவும் இக் காரையே பயன்படுத்தியிருக்கிறார்.
குறித்த நபர் இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்துவரும் கார் விற்பனை நிறுவனமொன்றின் ஊடாக இலங்கை பெறுமதி 3300 ரூபாவிற்கு 1931ஆம் ஆண்டு கொள்வனவு செய்துள்ளார்.
இதன் விலையை ஞாபகப்படுத்தும் வகையிலேயே இக் காரிற்கு இவர் 3300 என்ற இலக்கத் தகட்டையும் வைத்துள்ளார்.
இதன்பின்னர் அவர் இறந்துபோகவே யாழ்.குடாநாட்டில் பெயர்போன கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வன் (கப்பிரெக்ஸ் ரவி) என்பவருக்கு 1994 ஆம் ஆண்டு 2 அரை இலட்சத்திற்கு அக் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர் இக் காரை இன்றுவரை அவரே வைத்துள்ளார். தற்போது இக்காரை வைத்துள்ள குமாரசாமி ரவிச்செல்வன் கருத்து தெரிவிக்கும் போது,
இது நீண்ட பராம்பரியம் மிக்க கார். இதனை பண்ணையர் வைத்திருக்கும் போது எங்களுக்கு பத்து வயதிருக்கும். பண்ணையர் யாழ்ப்பாணத்தில் தினகரன் விழா நடக்கும் போது அங்கு இடம்பெறும் கார் போட்டியில் இக் காரே முதலிடம் பெறும். அப்போதிருந்தே எனக்கு இந்த காரில் பிரியம் ஏற்பட்டது.
அதன்பின்னர் பண்ணையர் இறந்துபோக இக் காரை நான் ஆசைப்பட்ட பிரகாரமே எனக்கு விற்றுவிட்டனர். அதன்பின்னர் இக் காரை என்னிடம் கொழும்பில் இருந்து கூட வந்து 45இலட்சம் வரை விலைக்கு கேட்டிருந்தனர். ஆனால் நான் விற்காமல் வைத்துள்ளேன்.
இக் காரில் முன்னால் உள்ள விளக்கின் மேல் சிவப்பு கல்லொன்று உள்ளது. இது கார் ஒடும்போது விளக்கு ஒளிர்கின்றதா? இல்லையா? என்பது சாரதி ஆசனத்தில் இருந்தவாறே இதனூடாக பார்க்க முடியும்.
தற்போது இக் காருக்கு தேவையான பாகங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு இலண்டனில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளேன் என்றார்.
அத்துடன் இலங்கையில் “A” எழுத்திலுள்ள ஒரேயொரு காரும் இதுவேயாகும். இக் காரை இறக்குமதி செய்த நிறுவனம் தற்போதும் கொழும்பில் அதே முகவரியில் உள்ளது அவர்கள் இறக்குமதி செய்த காரும் என்னிடமுள்ளது என்றார்.
தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள இக் கார் இலங்கையிலே “A ” எழுத்திலுள்ள ஒரேயொரு கார் என நம்பப்படுகின்றது. குறித்த காரை நல்லூர் ஆலய நிர்வாகத்தினர், இராணுவத் தளபதிகள் உட்பட பலர் 45 இலட்சம் ரூபா வரையில் கேட்டும் அதனை விற்காமல் அதன் உரிமையாளர் வைத்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
News in English:
87 years Old Italy Car in Jaffna