தமிழக அகதி முகாம்களிலிருந்து மேலும் சில இலங்கை தமிழர்கள் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர்.
இதில் 17 பெண்களும், 13 ஆண்களுமாக மொத்தம் 11 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் உள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 18ம் திகதி மதுரையிலிருந்து ஶ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
தற்போது நாடு திரும்ப உள்ளவர்கள் வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என இலங்கை மீள்குடியேற்ற அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) இவர்களுக்கான பயணச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், மீள் ஒருங்கிணைப்பு தொகையாக ஒரு நபருக்கு 75 டொலரும், பயணப் படியாக ஒரு நபருக்கு 19 டொலரும், உதவித்தொகையாக ஒரு குடும்பத்திற்கு 75 டொலரும் ஐக்கிய நாடுகள் ஆணையம் சார்பாக வழங்கப்படுகிறது.
2011 முதல் 5,000க்கும் மேற்பட்டோர் தமிழக அகதி முகாம்களிலிருந்து இலங்கைக்கு திரும்பி இருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் நாடு திரும்பினர்.
அத்துடன் இன்னும் தமிழகத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக வசித்து வசித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.