Ad Widget

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை கைவிடாது! : சுவாமிநாதன்

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையானதைச் செய்து வருகின்றது. இதன்போது பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகின்றது. இருப்பினும், அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களைக் கைவிடாது என மீள்குடியேற்ற, புனர்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் வங்கி ஆவணங்களைத் தொலைத்த 54பேருக்கு புதிய வங்கி ஆவணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், யோகர் சுவாமிகள் தன்னுடைய காலத்திலேயே கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் சிங்கள மக்களின் அட்டூழியங்களுக்கு உட்படுவார் என்றும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு அடிமைப்பட்டு வாழும் சந்தர்ப்பம் ஏற்படும். தமிழ் மக்கள் அடிவாங்குவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் சொன்னது போல தமிழ் மக்கள் கொடூரமான போரை சந்தித்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார்கள்.

ஆனாலும் தமிழ் மக்கள் தங்களுடைய மரபு,மொழி,பண்பாடு, கலாசாரம், கருத்துக்கள் என்பன பேணப்பட்டு வாழ்ந்து வருகிறது. இது உண்மையாக ஒரு பெருமையான விடயம். வட மாகாண வேகமாக வளாச்சிப்பெற்று வருகிறது இன்னும் நான்கு ஐந்து வருடங்களில் இந்த மாவட்டங்கள் முன்னேற்றம் அடையும் அதற்கு எங்களுடைய அரசு முன்வந்திருக்கிறது.

எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் சேர்ந்து தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முன்வந்து செய்து வருகின்றார்கள் என்பதனை நான் கூற விரும்புகின்றேன். அதனை தமிழ் மக்கள் மறுக்க முடியாது. இன்று ஜனாதிபதி ஜனாதிபதியாக இருப்பதற்கு காரணம் தமிழ் மக்களின் வாக்குகளே. ஆதலினால் அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களை கைவிடமாட்டார்கள். எங்களுடைய அரசாங்கம் ஒரு போதும் தமிழ் மக்களை கைவிடமாட்டார்கள் என்பதை நான் உறுதியாக கூற விரும்புகிறேன். இவ்வாறு நாங்கள் முற்போக்காக எங்களுடைய வேலைகளை செய்யும் போது பல தடைகள் இருக்கின்றன. அவை அரசியல் ரீதியான தடைகளாக இருக்கின்றன.

முப்பது வருடங்களாக யுத்தத்தால் அழிவடைந்த தமிழ் மக்களின் வாழக்கையை கட்டயெழுப்ப வேண்டும் என்பதற்காக அரசாங்கம் தங்களுடைய கடமையை முன் வந்திருக்கிறது. அதற்காக தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசு பிழை செய்தால் அதனை மக்கள் தாராளமாக கூறலாம் ஆனால் அபிவிருத்திப் பணிகளை செய்ய முன்னும் செய்கின்ற போதும் அதனை எதிர்கிறதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதனை நான் கூற விரும்புகிறேன்.

தமிழர்கள் வாழ வேண்டும் என்றால் சமூதாயம் முன்னேற வேண்டும் அதற்காக நாங்கள் எங்கள் கடமையைச் செய்கின்றோம் என்பதுதான் எமது கருத்து இதற்கு அரசியல் வேறுபாடு இருக்க கூடாது எந்தக் கட்சியாக இருந்தாலும் சமூதாய முன்னேற்றத்திற்காக உழைக்கின்றவர்களை நாம் ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.

Related Posts