ரணிலின் கருத்தை நிராகரித்தார் சுமந்திரன்!

ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பதுபோல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு சில முக்கியமான விடயங்களைக் கையாள்வதென்றே ஆரம்பத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதில் சமயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்தக்குழுவிலே இதுவரை அதிகாரப் பகிர்வு, தேர்தல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரம் ஆகிய மூன்று விடையங்கள் மாத்திரமே கலந்துரையாடப்பட்டது.

ஆனால், சமயம் தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மதசார்பற்ற நாடாக இலங்கை இருக்கவேண்டுமென, புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Related Posts