வடமாகாணத்தின் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாகவும் குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் உரியவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றில் சிறிதளவேனும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கோ அல்லது இனவாதிகளுக்கோ வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்கள் வடபகுதியின் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனைக் கூறினார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகளை அரச தரப்பு ஒட்டுக் கேட்பதாக எழுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்த ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, மஹிந்த ராஜபக்ச ஆட்சிசெய்த காலத்திலேயே தொலைபேசி ஒட்டுக்கேட்பு கலாசாரம் நிலவியதோடு, புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் அப்படிப்பட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை என்று தெரிவித்தார்.