சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினை மனிதாபிமான ரீதியில் அணுகுமாறு அரசாங்கத்தையும் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயிரம் ரூபாசம்பள உயர்வும் 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வாரத்தில் 06 நாட்கள் தொழிலும் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்துமாறு கோரி தொடர்ந்தும் 12 நாட்களாக மலையக தோட்ட தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளொன்றுக்கு 730 ரூபா வீதம் சம்பளம் வழங்க த தோட்டத் தொழிலாளர்கள் சங்கமும் முதலாளிமார் சம்மேளனமும் இணங்கியிருப்பது கவலைக்குரிய விடயம் என வடமாகாண முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கருத்து தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் நாட்டின் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்ற தொழில்களில் முன்னிலை வகிக்கக் கூடிய தேயிலை உற்பத்தி தொழிற்துறையின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய தோட்டத் தொழிலாளர்களின் இருப்பிட வசதிக் குறைவுகள், குழந்தைகளின் பாடசாலை வசதியின்மை ,சீதோஷ்ண நிலை போன்ற இடையூறுகளுக்கு மத்தியில் எமது நாட்டின் வளத்தை பெருக்குவதற்கு உழைத்து வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பெருந்தன்மையுடன் நோக்கப்பட வேண்டும்.
பயிற்சிபெறாத ஒரு கூலியாள் கூட குறைந்த பட்ச நாட்கூலியாக 1000 ரூபாவை பெறுகின்ற சந்தர்ப்பத்தில் தோட்டத் தொழில்த்துறையில் பயிற்சி பெற்ற இவர்களுக்கு நாளாந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கூடிய அளவிற்கு அவர்களின் சம்பளங்கள் தீர்மானிக்கப்படவேண்டும்.
அவர்களின் கோரிக்கையான 6 நாட்கள் தொழில் கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்வதற்கு அரசு ஏற்ற நிர்வாகங்களுடன் கலந்துரையாடவேண்டும்.
நலிந்து போன நிலையில் வாழுகின்ற தோட்ட மக்கள் நாட்டின் ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கக் கூடிய சலுகைகளுக்கும் வசதிகளுக்கும் ஒப்பானவகையில் அவர்களின் சம்பளங்களைத் திருத்தி அமைத்து வழங்க முன்வரவேண்டும்.
இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என வடமாகாண முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.