காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளும் கன்னட அமைப்புகளும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகிறார்கள். இந்நிலையில், இதொல்லே ராமாயணா கன்னடப் பட நிகழ்ச்சிக்காக நடிகர் பிரகாஷ் ராஜைப் பேட்டி கண்ட கன்னட டிவியின் தொகுப்பாளர், காவிரி விவாகரம் குறித்து கேள்வி கேட்டார்.
இந்தக் கேள்வியால் கோபமடைந்த பிரகாஷ் ராஜ், பேட்டியாளரிடம் கூறியதாவது:
காவிரி விவகாரம் அரசியல் ரீதியாக பெரிய விஷயம். அது நீர் சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல. இதில் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. இதை விரிவாகப் பேசவேண்டும். திரைப்பட நிகழ்ச்சியில் இதுபோன்ற கேள்வி கேட்டு என் வாயைப் பிடுங்கவேண்டாம்.
ஒரு சினிமா நடிகனிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும்? ஏன் உங்களுக்கு இந்தக் கெட்டப் புத்தி? ஏற்கெனவே மக்கள் கோபமாக இருக்கிறார்கள். நீங்கள் பொறுப்புடன் இருக்கவேண்டும். நான் சொல்வதை அப்படியே ஒளிபரப்பவேண்டும். எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் என்கிற அடிப்படை அறிவு இருக்கவேண்டாமா? நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டது தவறுதானே! நான் பாவம் இல்லையா? சினிமா நிகழ்ச்சியில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாது என்றார்.
இதன்பிறகு மிகவும் கோபத்துடன் பேட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.