Ad Widget

ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு

நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

yoshi-nobal

பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும், “ஆட்டோஃபஜி’ என்றழைக்கப்படும் “சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை கூறியதாவது:

உயிரிணுக்களின் சுய துப்பரவு செயல்நுட்பம் குறித்து மிகக் குறைவாகவே அறியப்பட்டிருந்த நிலையில், 1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அதுகுறித்து யோஷினோரி ஓசுமி பல்வேறு அபாரமான ஆய்வுகளை மேற்கொண்டார்.
ரொட்டி தயாரிப்பதற்குப் பயன்படும் நொதிகளை (யீஸ்ட்) மட்டுமே வைத்து, உயிரணு சுய துப்பரவுச் செயலுக்குக் காரணமான மரபணுக்களை அவர் கண்டுபிடித்தார்.

நொதிகளின் உயிரணுக்கள் பயன்படுத்தும் சுய துப்பரவு செயல்நுட்பத்தையே, மனிதர்களின் உடலில் உள்ள உயிரணுக்களும் பயன்படுத்துகின்றன என்பதையும் அவர் ஆய்வின் மூலம் விளக்கினார்.

உயிரணுக்கள் தம்மைத் தாமே எவ்வாறு சுத்தம் செய்து கொள்கின்றன என்பது குறித்த உயிரியலில், யோஷினோரி ஓசுமியின் கண்டுபிடிப்புகள் புதிய கோட்பாடுகளை வகுத்துள்ளன.

உயிரணுக்களின் சுய துப்பரவுப் பணிகள் பாதிக்கப்பட்டால், அது புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களுக்குக் காரணமாகிறது.

யோஷினோரி ஓசுமியின் கண்டுபிடிப்புகள் அத்தகைய நோய்களுக்கு எதிரான மருத்துவத்துக்கு உதவும் என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.

மருத்துவப் பிரிவில், கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீனாவைச் சேர்ந்த யூயூ தூ, அயர்லாந்தில் பிறந்த அமெரிக்கர் வில்லியம் கேம்பெல், ஜப்பானைச் சேர்ந்த சதோஷி ஒமுரா ஆகியோருக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது.

நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு பிறந்த அவர், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
தனது கடைசி உயில் முலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன.

யோஷினோரி ஓசுமி (71)
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கடந்த 1974-ஆம் ஆண்டு ஆய்வாளர் பட்டம் பெற்றார்.
தற்போது டோக்கியோ தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நோபல் பரிசுடன் அவருக்கு 9.36 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும்.

Related Posts