நியூசிலாந்தில் சம்பந்தனை புகழ்து பேசிய பிரதமர் ரணில்!

நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்‌ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துக்கு சென்றுள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், ஒக்லண்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து, கடந்த சனிக்கிழமை (01) மாலை, சந்தித்துக் கலந்துரையாடினார்.

அங்கு உரையாற்றிய பிரதமர், அந்தக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பௌத்த மதகுருமார்கள் மற்றும் முஸ்லிம் மதகுருவையும் விளித்தார். அத்துடன், இலங்கை தூதுக்குழுவிலிருந்த முக்கியஸ்தர்களையும் விளித்த அவர், நியூசிலாந்து அமைச்சர்கள் இருவரையும் விளிக்க மறக்கவில்லை.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில், நியூசிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் அன்ரிவ் லிட்டிலும், சமுகமளித்திருந்தார்.

அவரையும் விளித்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றேன் என்பதற்காக மனந்தளர வேண்டாம். ஏனென்றால், நானும் சுமார் 10 வருடங்களாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவன் தான்” என்றார். அப்போது, அவையில் இருந்தவர்களே வாய்விட்டு சிரித்துவிட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மறந்துவிடாத, பிரதமர், தேசிய அரசாங்கமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிறுவப்பட்டமைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

“இந்த நல்லாட்சி அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் தலைமையிலான கட்சி உள்ளிட்ட இன்னும் பல கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலேயே, இருக்கின்றது. ஆகையால், தேசிய அரசாங்கத்தை கொண்டுநடத்துவதில் இலகுவாக இருக்கின்றது. ஒன்றிணைந்த எதிரணியும் அங்கு (இலங்கையில்) இருக்கின்றது.

ஜே.வி.பி.யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம்முடன் இணைந்தே வேலை செய்கின்றன. தேசிய அரசாங்கத்தை பொறுத்தவரையில், நல்லிணக்கம் முக்கியமானதாகும். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன், எனக்கு முன்னதாகவே, அதாவது, 1977லேயே நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார். அவர் மிகவும் நேர்மையான மனிதர். நியாயமான செயற்பாடுகளுக்காக எந்தநேரமும் ஒத்துழைப்பு நல்குவார். தமிழ் எம்.பி.க்களுக்கு ஒரு முன்மாதியாக திகழ்கின்றார்’ என்று, சம்பந்தரை பிரதமர், புகழ்ந்துப் பேசினார்.

Related Posts