தமிழர் மௌனத்தை கலைத்ததால் தென்னிலங்கை குழம்பிவிட்டது: முதலமைச்சர் சி.வி.

தமிழ் மக்கள் வெளிப்படையாக பேச முற்பட்டுள்ளதை அடுத்தே தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகளும் ஏனையோரும் குழப்பமடைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

சிங்களத் தரப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழருக்கு விரோதமான நடவடிக்கைகளை கண்டும் தமிழ் மக்கள் மௌனிகளாக இருந்ததை அவர்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு விட்டதாக கருதிய சிங்களத்தரப்பு, தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க முற்படும்போது குழப்பமடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனாலேயே யாழப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற எழுக தமிழ் பேரணியை அடுத்து தன்னையும் தமிழர் தரப்பையும் இனவாதிகளாக அடையாளப்படுத்த தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகளும் ஏனையோரும் முற்பட்டுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி நகரில் மக்களின் தேவைகளை அறிந்து கொள்ளும் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்கள் சந்திப்பின நோக்கம் குறித்து தெளிவுபடுத்தியதுடன் அண்மைய நாட்களாக தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுபலசேன போன்ற சிங்கள பேரினவாத தரப்புக்கள் அவரை மிகவும் மோசமான இனவாதினாக சித்தரித்து வருவது தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.

Related Posts