யாழ்ப்பாணம் கீரிமலை இந்துக்களின் புண்ணிய பூமியாக பார்க்கப்படுகையில் அதனை புனித பூமியாக்கி அங்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழுவினர் தலைவர் ச.சஜீவன் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதற்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வந்திருப்பது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் மற்றும் இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முற்பகல் கீரிமலைக்குச் சென்று புனித பூமியாக்குவது குறித்து கோவில் குருக்கள், தர்மகர்த்தாக்கள் மற்றும் பொதுமக்கள் சிலரை அழைத்து பேசியுள்ளனர்.
கீரிமலை இந்துக்களின் புண்ணிய பூமியாகடகப்படுகின்றது. இதனை புனித பூமியாக்கி திருகேதீஸ்வரம், கோணேஸ்வரம் போன்று கீரிமலையிலும் புத்தர் சிலை வைத்து பௌத்தமயமாக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதற்கு இந்தியா உதவ முன்வருவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள மீள்குடியேற்ற குழு தலைவர் கீரிமலையில் இந்துக்கள் பிதிர்க்கடன் மேற்கொள்கின்றனர். அங்கு இந்துக்களின் கோவில்களும் உள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னர் கீரிமலைக்கு அண்மையாக இறங்குதுறை அமைக்க முற்பட்ட நிலையில் தற்போது புனித பூமியாக்க முற்பட்டு இப்பிரதேசத்தையும் பௌத்தமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.