வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் நடாத்திவருவதால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிகையலங்கரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிகையலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீபன் கருத்துத் தெரிவிக்கையில்,
வவுனியாவில், பம்பைமடு மற்றும் நாம்பன்குளம் ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் நடாத்தி வருகின்றனர்.
நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் செய்துவரும் தொழிலை இராணுவத்தினர் செய்துவருவதால் எமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் பம்பைமடு இராணுவ முகாம் பொறுப்பதிகாரியுடன் இந்த விடயம் குறித்து கதைத்தோம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் எமது நிலையங்கள் பூட்டப்படுவதால் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுமாறும் அல்லது பொதுமக்களுக்கு அன்றைய தினம் முடி வெட்டுவதை தவிர்க்குமாறும் கேட்டிருந்தோம்.
அத்துடன் எமது சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியலை பயன்படுத்துமாறும் கேட்டோம். அவர்கள் இக் கோரிக்கைகளை எழுத்து மூலம் பதிவு தபாலில் அனுப்புமாறு கேட்டார்கள். அதன்படி அனுப்பியும் வைத்தோம்.
இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வழமை போல் இராணுவத்தின் சிகை அலங்கரிப்பு வேலைகளை செய்து வருகிறார்கள்.
இதனால் எமது தொழில் தான் பாதிக்கிறது. வவுனியா மட்டுமல்ல வடமாகாணத்தில் பரவலாக இத்தகைய வேலைகளில் இராணுவம் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தமக்கு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.