‘சமாதானமும்,சகோதரத்துவமும், நல்லிணக்கமும்’ எனும் தொனிப்பொருளில் 42 ஆவது தேசிய விளையாட்டு விழா நாளை வியாழக்கிழமை ( 29) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கான தேசிய விழாவினை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. நாளைய ஆரம்ப வைபவத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இவ் விளையாட்டு விழா 30 மற்றும் ஒக்டோபர் 01 ஆம் 02 ஆம் திகதிகளாக 4 நாட்கள் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 2 ஆம் திகதி விளையாட்டு விழாவின் இறுதிநாளன்று பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசில்களையும் வழங்கிவைக்கவுள்ளார்.
மேலும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த தேசிய விளையாட்டு விழாவிற்காக, நாடளாவிய ரீதியில் இருந்து மாணவர்கள் பங்கு பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.