அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் 65வருட கோரிக்கைகளையும், அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான தீர்வு கிடைக்குமா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியின் பொதுக்கூட்டம் நேற்று (சனிக்கிழமை) முற்றவெளியில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘அரசியலமைப்பு என்பது அந்த நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அனைவரும் சொந்தம் கொண்டாடக் கூடியதுமான ஒரு அரசியலமைப்பாக இருக்கும்.
இலங்கையில் தமிழ் மக்களை காரணம் காட்டி, புதிய அரசயிலமைப்பு தயாரிக்கப்படவுள்ளது. இந்த அரசியலமைப்பில் 65 வருடம் ஏமாற்றப்பட்டு பல தியாகங்களை செய்து, பேரிழப்புக்களைச் சந்தித்துள்ள தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே.
இந்த புதிய அரசியலமைப்பு இரகசியமாக தயாரிக்கப்படுகின்றது. உண்மையிலேயே இந்த மக்களுடைய அபிலாஷைகள் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைமை இருந்தால் ஏன் இந்த ரகசியம். ‘எழுக தமிழ்’ பேரணி தமிழ் தேசத்தினுடைய எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தியாகும்’ என்றும் கூறினார்.