அனுராதபுரம் சிறையில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகளை நேற்று (23) வெள்ளிக் கிழமை பிற்பகல் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா நேரில் சென்று சந்தித்த போது ´நாங்கள் கோருவது, உடனடி விடுதலையை அல்ல, எமக்கான துரித நீதியையும் , எமக்கு விளங்கக் கூடிய மொழியிலான நீதி நடவடிக்கைகளையுமே´ என அவர்கள் எடுத்தியம்பியதாக அவர் தெரிவித்தார்.
அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிற்கு மேலும் கூறியதாவது,
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னைநாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் செப்ரெம்பர் 2013 இல் இலங்கைக்கு விஜயம் செய்தவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை துரிதமாக விசாரிப்பதற்காக அனுராதபுரத்தில் விஷேட மேல் நீதிமன்றமொன்று ஏற்படுத்தப்பட்டதாகவும், அந்த விஷேட மேல் நீதிமன்றம் கடந்த மூன்று வருடங்களாக தங்கள் பதினெட்டு பேரிற்கும் எதிரான ஆறு வழக்குகளை தொடர்ந்தும் விசாரித்துக் கொண்டிருக்கின்றதென்றும் , மூன்று, நான்கு மாதங்களிற்கொருமுறைதான் தங்கள் வழக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றதென்றும் தெரிவித்தனர்.
ஆனால் இந்த மூன்று வருடகாலத்திற்குள் இதே விஷேட நீதிமன்றம் முந்நூற்று நாற்பத்தாறு சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்ட ´குமரபுரம் கொலை வழக்கு´ தொடர்பான இராணுவ அதிகாரிகளிற்கெதிரான வழக்கானது, திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு எதிரிகள் நீதிமன்ற நடைமுறைகளை விளங்குவதற்கான மொழி இடர்பாடுகளிருந்தமையால் மாற்றப்பட்டதாகவும், தங்களிற்கும் அனுராதபுரத்தில் நடைபெறும் விசாரணைகள் சிங்களத்தில் நடைபெறுவதால் மொழியை விளங்கிக் கொள்வதில் சிரமங்களுள்ளதால் அவர்களின் வழக்கு விசாரணைகளையும் வவுனியா அல்லது யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும் கோரியே உண்ணாவிரதமிருப்பதாகவும் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்கள் உண்ணாவிரதப் போராட்டம், தங்களது விடுதலையைக் கோரியல்ல, என்ற தவறான கருத்தை ஊடகங்களிற்கும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரிற்கும் என்னை எடுத்துக் கூறி அவர்களின் போராட்டத்தின் நியாயத் தன்மையை விளங்க வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.