Ad Widget

அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் முதல் கட்டமாக அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 தமிழ் அரசியல் கைதிகளே சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நேற்ற முன்தினம் 21 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் போலி வாக்குறுதிகளை வழங்கி தமது விடுதலையை காலதாமதப்படுத்துவதாகவும் தமது விடுதலையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் பல தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்வதாக உறுதி மொழிகளை வழங்கியதுடன் வழக்குகளை விசாரணை செய்ய விசேட நீதிமன்றமும் அமைத்திருந்தனர்.

எனினும் விசேட நீதிமன்றத்தின் ஊடாக அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு வருவதனால் தமது விடுதலை காலதாமத்தமாவதாக அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பெயர் வெளியிடப்பட்ட 23 கைதிகளுக்கான புனர்வாழ்வு காலம் தொடர்பாகவும் அரசாங்கம் எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts