வடமாகாண சபையின் நிதியிலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு, புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 21 சுகாதார ஊழியர்கள் தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நேற்று வியாழக்கிழமை (22) விளக்கமளித்தார்.
வடமாகாண சுகாதார ஊழியர்கள் எவரேனும் வெளி மாகாணங்களில் பணியாற்றுகின்றனரா? என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், ‘2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மன்னாரைச் சேர்ந்த 21 சுகாதார ஊழியர்கள் புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றினர். அவர்களுக்கான வேதனம் மன்னார் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இருந்து வேதனம் செல்கின்றது’ என்றார்.
அத்துடன், ‘மீண்டும், இங்கு வந்து சேவையாற்றுமாறு அவர்களுக்கு கூறியபோது, மீள்குடியேற்றத்தை காரணங்காட்டி கால நீடிப்பு கேட்டனர். அதற்கிணங்க 3 தடவைகள் காலநீடிப்புச் செய்யப்பட்டது. இறுதியாக கடந்த ஜனவரி மாதம் சம்பளத்தை நிறுத்தப்போகின்றோம் எனக்கூறினோம். அதன்போது, தங்களுடைய பிள்ளைகளின் படிப்பு மற்றும் அவர்களின் நலன்காரணமாக காலநீடிப்பு கேட்டனர்.
மனிதாபிமான அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் வரையில் இறுதியான காலநீடிப்பை வழங்கினோம். கால நீடிப்பு முடிவடைந்ததும், 3 பேர் மாத்திரம் வருகை தந்தனர். அவர்கள் மூவரும் வருடாந்த விடுப்பு கேட்டனர். இதனையடுத்து, 21 பேருடைய வேதனமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களை மன்னாரில் வந்து சேவையாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது’ என அவர் மேலும் கூறினார்.