பொன் அணிகள் போர்: சந்தேகநபர்களுக்கு நிபந்தனை பிணை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பின்னெல் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று வியாழக்கிழமை (22) அனுமதியளித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் – யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற பொன் அணிகள் கிரிக்கட் போட்டியின் போது, மைதானத்தில் வைத்து ஜெயரட்ணம் தனுஷன்அமலன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன், சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொலைக் குற்றம் சுமத்தி, யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முதற் தடவையாக 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்தன் எதிரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, சந்தேகநபர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

மல்லாகம் நீதிமன்றத்தால் பிணையில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த, இந்த 6 சந்தேகநபர்களும் சட்டத்தரணியூடாக நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதன்போது, சந்தேகநபர்களின் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டன. இதுவரை காலமும் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பான அறிக்கை பிரதியும் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகைப் பிரதியும் தமிழ் மொழியில் தனித்தனியாக எதிராளிகளுக்கு வழங்கப்பட்டதோடு குற்றப்பத்திரம் மன்றில் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எதிராளிகள் சுற்றாவாளி என தெரிவித்தனர்.

அவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதியளித்தார். அத்துடன், சில நிபந்தனைகளையும் நீதிவான் விதித்தார்.

‘பிணையில் செல்லும் எதிராளிகள் எந்த வகையிலும் சாட்சியங்களுடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடாது. வழக்கு தொடர்பில் சட்டத்தரணியூடாகவே அணுக முடியும். சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டால் அல்லது அசௌகரியத்துக்குள்ளாக்கப்பட்டால் உடன் பிணை இரத்துச் செய்யப்படும். வழக்கு தவணைகளுக்கு தவறாது ஆஜராகவேண்டும். ஒருவர் ஆஜராகாவிட்டாலும், மிகுதியானர்கள் அனைவரும் பொறுப்பாளிகளாகி, விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்’ என நிபந்தனைகளை விதித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகள் தொடர் வழக்காக இடம்பெறும் என நீதிபதி தெரிவித்தார்.

Related Posts