இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகுக்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க, தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோதே, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இதனைத் தெரிவித்தார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இராப்போசன விருந்துக்கும் ஜனாதிபதி சிறிசேனவுக்கு அழைப்புக் கிடைக்கப் பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் உரையாற்றும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, மாநாட்டில் உரையாற்றிய அவர், பயங்கரவாதச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு பூகோள ஒத்துழைப்பொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.