அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான பயிற்சி மஹரகம, கண்டி, வெயாங்கொட, களுத்துறை, வவுனியா ஆகிய இடங்களிலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறுகின்றன.

பாடசாலைக் கல்வியை தரமான வகையில் மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சியை கட்டாயமாக்கி இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக சமீபத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பயிற்சியற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா ஆசிரியர்கள் 1035 பேருக்கு புதிய கற்பித்தல் முறை தொடர்பாக தங்குமிட பயிற்சி கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 5 மத்திய நிலையங்களில் இரண்டு கட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முதல் கட்டத்தில் 600 ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளன. இந்த பயிற்சியானது அடுத்த மாதம் 7ம் திகதி வரை நடைபெறும்.

இரண்டாம் கட்ட பயிற்சி நடவடிக்கையானது ஒக்டோபர் மாதம் 10ம் திகதி முதல் 30ம் திகதி வரை இடம்பெறும். இக்கட்டத்தின் கீழ் 435 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. பயிற்சியின் பின்னர் இவர்கள் குறிப்பிட்ட பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுவர். கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மத்திய நிலையங்களில் சமூகமளிக்க வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts