Ad Widget

தண்ணீர் குடிக்கப் போன ராம்குமார் மின்வயரைக் கடித்து தற்கொலை-சிறை வார்டன்

தண்ணீர் குடிக்கப் போவதாக கூறிவிட்டு போன ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தன்னுடைய உடம்பில் மின்சாரத்தைப் பாய்ச்சிக்கொண்டு உயிரிழந்து விட்டதாக சம்பவம் நடந்த போது உடனிருந்த சிறைக்காவலர் கூறியதாக புழல் சிறை வார்டன் கூறியுள்ளார்.

ramkumar-swath

மின்சாரம் தாக்கியதில் ராம்குமார் தூக்கி வீசப்பட்டதால் உடனிருந்த கைதிகள் யாரும் ராம்குமாரை காப்பற்றவில்லை என்றும் அவர் சிறைவார்டன் தெரிவித்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அவர் மின்சார வயரை கடித்து மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆசியாவிலேயே அதிக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புழல்சிறை வளாகத்தில் எப்படி ஒரு கைதி மின்சாரம் தாக்கி தற்கொலை செய்ய முடியும். ஒவ்வொரு சிறை அறையிலும் மின்சார பெட்டி சிறையின் வெளிபுறத்திலேயே அதுவும் கைதிகளுக்கு எட்டாத வகையில் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் ராம்குமார் எப்படி மின்சார பெட்டியில் உள்ள வயரை அதுவும் தனது பற்களால் கடித்து தற்கொலை செய்ய முடியும் என்பது ராம்குமார் உறவினர்களின் கேள்வியாகும்.

புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று காலை நல்ல முறையில் சிற்றுண்டி சாப்பிட்டார். மதியம் அனைவரும் உணவுக்கு சென்ற பின்னரும் ராம்குமார் மட்டும் செல்லவில்லை. இதற்கிடையே, சிறை அறை வளாகத்தில் மின் இணைப்பில் இருந்த வயரை பல்லால் கடித்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து ராம்குமார் தூக்கிவீசப்பட்டு முகம் கருகிய நிலையில் மயங்கி கிடந்தார்.

சிறைபாதுகாவலர்கள் உடனடியாக ராம்குமாரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் சிறை வளாகத்தில் கைதிகளை கண்காணிக்க சிறை பாதுகாவலர்கள் அதிகளவில் உள்ள நிலையில் அதுவும் பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ராம்குமார் கைது செய்யப்பட்டபோது முதல்வர் அறிக்கையில் கூட சுவாதி கொலை வழக்கில் எந்த ஆவணமும் இன்றி கொலையாளி கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்திருந்தார். தற்போது ராம்குமார் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டதாக போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதை நாங்கள் எப்படி நம்ப முடியும் என்று ராம்குமாரின் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராம்குமார் நேற்று மின்சார வயரை கடித்து உடலில் மின்சாரத்தை பாய்ச்சி சுருண்டு விழுந்தபோது, அவருடன் 4 கைதிகளும் இருந்து உள்ளனர். சிறைக்காவலர் பேச்சிமுத்துவும் அங்கு காவல் பணியில் இருந்து உள்ளார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் சில நிமிட நேரத்துக்குள் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது என்று கூறினார்.

மாலை 4.45 மணியளவில் சிறைகைதிகள் அவரவர் அறைகளில் இருந்து வெளியே அழைக்கப்பட்டனர். ராம்குமாரும் வெளியே வந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் அருகேயுள்ள அறையில் தண்ணீர் குடித்துவிட்டு வருவதாக கூறி சென்றார். அப்போது தான் அங்குள்ள மின்சார பெட்டியை உடைத்து மின் வயரை கடித்துவிட்டார்.

மின்சாரம் பாய்ந்த உடன் ராம்குமார் தூக்கிவீசப்பட்டு கீழே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அவருடன் இருந்த மற்ற 4 கைதிகளும் ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் பாய்ந்ததால் அவரை மற்ற கைதிகள் காப்பாற்றவில்லை. நான் அருகில் ஓடி சென்றேன். அதற்குள் அவர் கீழே சாய்ந்து விட்டார். உடனே அருகில் உள்ள சிறை மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தோம். அங்கு பணியில் இருந்த டாக்டர் நவீன்குமார் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். முடிந்தவரை நாங்கள் அவரை காப்பாற்றத்தான் முயற்சித்தோம் என்று அவர் கூறியதாக சிறைத்துறை வார்டன் தெரிவித்துள்ளார்.

Related Posts