தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடலை நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்ல காவல்துறை அனுமதி வழங்கியது.
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் விக்னேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னார்குடி கொண்டு செல்வதற்காக அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஏற்றப்பட்டது.
அப்போது விக்னேஷ் உடலை நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும் என சீமான் தெரிவித்தார். ஆனால், இதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸாருக்கும், சீமான் தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.
இறுதியில், விக்னேஷ் உடலை நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்ல போலீஸ் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு விக்னேஷ் உடல் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. மாலை 6 மணி வரை விக்னேஷ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
சனிக்கிழமை காலை 11 மணிக்கு விக்னேஷின் சொந்த ஊரான மன்னார்குடியில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
அமைதியான முறையில் விக்னேஷ் உடல் மன்னார்குடியில் அடக்கம் செய்யப்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சீமான் வேண்டுகோள்:
முன்னதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ”தற்கொலை மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிட்டாது. விக்னேஷ் எடுத்த முடிவை இனி எவரும் எடுக்கக்கூடாது” என்றார்.