தமிழ் மக்களை எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்போவது அரசியலல்ல எனவும் அது தமிழ் மொழியே எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பாரம்பரியங்கள், தமிழ் வாழ்க்கை முறை, சமூக ஒருமைப்பாடு ஆகியன வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கலை, கலாச்சார உப குழுவின் ஏற்பாட்டில் வடக்குக் கிழக்கு மற்றும் தமிழக தமிழ்க் கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பிக்கும் மாபெரும் முத்தமிழ் விழா நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மாலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
எமது அரசியல் விவகாரங்களில் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், அரசியல் திருத்த சட்ட மூலங்களில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் தமிழ் மக்களுக்கு பக்கபலமாக நின்று உதவுவதற்கும் ஏற்றதொரு அமைப்பை உருவாக்க வேண்டும் என பல அறிஞர்களும், கல்விமான்களும், வைத்தியகலாநிதிகளும், அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டதால்த்தான் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பு உருவாகியதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் இந்த புதிய முயற்சி தமிழ் மக்களின் விடிவுப் பாதைக்கான ஒரு உந்துசக்தியாக அமையும் என்ற காரணத்தினால் நானும் அந்த அமைப்புக்கு நிபந்தனையுடன் கூடிய அனுசரணை வழங்க முன்வந்ததாக குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் பேரவை எக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடனேயே இணைந்து கொண்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இதுவரை காலமும், பல விதங்களில் எமது முரண்பாடுகளையே முன்னிறுத்தி வந்துள்ளோம்.
நான் வேறு குடி நீ வேறு குடி, நான் வடக்கு நீ கிழக்கு, நான் விவசாயி நீ மீன்பிடிப்பவன், நான் தமிழன் நீ முஸ்லீம் என்று பிரிவினையுடன் வாழ்ந்தோம். எதிர்காலத்திலாவது வடக்கு மற்றும் கிழக்கு மக்களை தமிழ் மொழி ஒன்றுபட வைக்கட்டும்!
தமிழ் மொழியின், அதன் இலக்கியத்தின், அதன் பாரம்பரியத்தின், அதன் இலட்சியத்தின் அழகில் இனி ஒன்றுபட முன்வருவோமாக!
எங்களுள் வேற்றுமைகள் பல உண்டு. கட்சி வேற்றுமையுண்டு, காட்சி வேற்றுமையுண்டு, ஆனால் நாம் அன்பால் ஒன்றுபட முடியும். தமிழ் அழகால் ஒன்றுபட முடியும். இலக்கிய அறிவால் ஒன்று பட முடியும். அந்த ஒற்றுமையை வட கிழக்கு மாகாண மக்களாகிய நாம் யாவரும் வரவேற்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.