முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை சக கைதி ஒருவர் தாக்கியுள்ளார்.
இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை, செவ்வாய்க்கிழமையன்று காலையில் சக கைதியான ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு பைப் ஒன்றினால் தாக்கியதாக கூறப்படுகிறது. கொலை மற்றும் கடத்தில் வழக்கில் தண்டனை பெற்று ராஜேஷ் கண்ணா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தலையிலும் கையில் காயமடைந்த அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இரு கைதிகளுமே வெவ்வேறு பிரிவுகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் இந்தத் தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்து சிறைத்துறை விசாரித்துவருகிறது.
காயமடைந்த பேரறிவாளனை சந்திப்பதற்காக அவரது பெற்றோர் வேலுர் சிறைக்குச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். உடனடியாக, பேரறிவாளனை சிறைவிடுப்பில் அனுப்ப வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகிறார்.