யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைக் கொடுமையினால் தனது பல்கலைக் கழக கல்வியினை இடை நிறுத்தி தினக் கூலிவேலைக்காக மாணவன் செல்லும் அவலம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பகுதியினைச் சேர்ந்த மாணவன் இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் ஆண்டில் இணைந்து கொண்டார் . இணைந்த நாட்கள் முதல் ஒரே பகிடிவதைக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணத்தினால் பகிடி என்னும் பெயரில் கடும் தாக்குதலுக்கும் உள்ளானதாக குறிப்பிடும் மாணவர்தரப்பு இதனால் பொறுமை இழந்து கை கலப்பில் ஈடுபடும் நிலமைக்கு இட்டுச் சென்றதாக குறிப்பிடுகின்றனர்.
இதன் காரணத்தினால் உயர் கல்வியை எதிர் பார்த்து பல்கலைக் கழகத்தில் இணைந்த குறித்த மாணவன் வெறும் 3 மாதகாலத்தில் கல்வியை இழந்து வீட்டில் தவிக்கும் அவலம் தொடர்கின்றது . எனவே உரிய அதிகாரிகள் இது போன்ற சம்பவங்களிற்கு ஆவண செய்ய வேண்டும் என உறவுகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
இது குறித்து பல்கலைக் கழக நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்டு கேட்டவேளையில் ,
இவ்வாறானதொரு சம்பவம் இதுவரைக்கும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இருப்பினும் உடனடியாக குறித்த மாணவன் நிர்வாகத்துடனோ அல்லது பீடாதிபதியுடனோ தொடர்பு கொண்டு தனக்கான பாதுகாப்பான கல்வியை பெற முடியும்.
மாணவர்கள் தமக்கான இடையூறுகளையும் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த முன் வர வேண்டும். ஏனெனில் இது ஒரு மாணவனை மட்டும் பாதிக்கும் விடயமல்ல. அத்துடன் மாணவர்களின் எதிர் காலத்தினை வளப்படுத்தவே நிர்வாகம் காத்திருக்கும் நிலையில் இவ்வாறான சம்பவங்கிளினால. ஓர் மாணவன் வீதியில் நிற்பதை அனுமதிக்க முடியாது. எனத் தெரிவிக்கப்பட்டது.