உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரது வீட்டின்மீது விசமிகளால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியில் அமைந்துள்ள ஆசிரியர் சாம் என்பவரது வீட்டின் மீதே, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் ஆசிரியரது வீட்டின் யன்னல் கண்ணாடி மற்றும் சுவர் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் குறித்த கல்லூரி மாணவிகள் கடந்த நாட்களில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததோடு, இதன்போது பொலிஸாரும் பாடசாலை நிர்வாகமும் நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரி யாழ் சென்றிருந்தபோது இவ்விடயம் அவரது கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்ததோடு, நேற்றைய தினம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகளும் பெற்றோரும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.