யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
போதைப் பொருளை ஒழித்தல், யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு விழா, யாழ் புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத் திறப்பு விழா ஆகிய வைபவங்களில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இவற்றில் முதல் நிகழ்வாக போதையிலிருந்து விடுப்பட்ட நாடு எனும் கருப்பொருளில் மது மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிக்கும் நாடளாவிய திட்டத்தின் எட்டாவது நிகழ்வை ஜனாதிபதி வைபவரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியிருந்தார்.
நாட்டில் சாராய விற்பனையில் முதலிடம் வகிப்பதுடன், போதைப் பொருள் பாவனை காரணமாக பல சமூக சீர்கேடுகளும், மோசமான சமூகக் குற்றச் செயல்களும் இடம்பெறுவதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
பின்னர் அவர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் பொலிஸ் நிலையத்தை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் திறந்து வைத்தார். அங்கு அவருக்கு பொலிசாரினால் செங்கம்பள மரியாதையுடன் கூடிய பொலிஸ் அணிவகுப்பு கௌரவத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
யாழ் பொலிஸ் நிலையத்தின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த அழைப்பையேற்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் யாழ் மாவட்ட நீதவான் சதீஸ்கரன், யாழ் மாவட்ட சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
பொலிஸ் நிலையத் திறப்பு விழாவின் தேநீர் இடைவேளையின்போது, இந்த நீதிபதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் திடீர் பிரத்தியேக சந்திப்பொன்று இடம்பெற்றது.
சுமார் பதினைந்து நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போதே யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என உறுதியளித்தார்.
யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் என்பவற்றையும் அங்கு இடம்பெறுகின்ற குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக இதில் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
இருக்கையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஜனாதிபதி தன்னை நோக்கி நீதிபதிகள் குழுவினர் வருவதைக் கண்டதும், ஆசனத்தில் இருந்து எழுந்து அவர்களுக்கு கௌவரமளித்தார். வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் இராணுவ, கடற்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் துறை ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் கூடியிருந்த அந்த மண்டபத்தில் நீதபதிகளுக்கு ஜனாதிபதி அளித்த கௌரவம் அனைவரினதும் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தது.
அங்கு இடம்பெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி இருக்கையில் அமர்ந்தவாறே கலந்துரையாடலாம் என யாழ் மேல் நீதிபதி ஜனாதிபதியிடம் தெரிவித்த போதிலும், அவரும் நின்ற நிலையிலேயே அவர்களுடன் உரையாடினார்.
யாழ் குடாநாட்டின் குற்றச் செயல்கள் நிலைமை குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் நீதிமன்றங்கள் அளித்து வருகின்ற பங்களிப்பு, அதற்கான நீதிமன்றச் செய்பாடுகள் என்பவற்றை நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தார்.
தென்னிந்தியாவில் இருந்து யாழ் குடாநாட்டுக்கு போதைப் பொருள் கடத்தப்படுகின்றது. கடத்தல் மட்டுமல்லாமல், போதைப் பொருள் வர்த்தகமும் இங்கு இடம்பெற்று வருகின்றது.
இந்த வர்த்தகம் தற்போது, மாதகல் மற்றும் பருத்தித்துறை கடற்கரைப் பிரதேசங்களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது,கடலோரப் பிரதேசங்களில் அண்மைக்காலமாக பெருந்தொகையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.
இங்கு நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில், முக்கியமாக 10 வீதமான கஞ்சா மட்டுமே, யாழ் குடாநாட்டுக்குள் விடப்படுகின்றது. மிகுதி 90 வீதமான கஞ்சா யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கைக்குக் கடத்தப்படுகின்றது.
எனவே, இந்த போதைப்பொருள் கடத்தலையும் வர்த்தகத்தையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால், நெடுந்தீவில் இருந்து மன்னார் வளைகுடா வரையில் கடற்படையினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டு போதைப் பொருளைக் கடத்தலில் ஈடுபடும் படகுகளை கடலில் வைத்து கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கு இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, அந்த மண்டபத்தில் சமூகமளித்திருந்த வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பியால் டி சில்வா, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்பகுதி அபிவிருத்திக்கான அமைச்சர் சாகல ரட்நாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ் குடாநாட்டுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன ஆகியோரைத் தன்னிடத்தில் அழைத்து, நீதிபதி இளஞ்செழியனை அவருடைய கோரிக்கையை அவர்கள் முன்னிலையில் மீண்டும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, நெடுந்தீவில் இருந்து மன்னார் வளைகுடா வரையில் கடற்படையினருடைய ரோந்து நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும், யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் வர்த்தகத்தையும் ஏனைய குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி நீதிபதிகள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் அமைச்சருடன் கலந்தாலோசனை நடத்தினார்.
புங்குடுதீவு மாணவியின் கூட்டுப்பாலியல் கொலை, அதனையடுத்து யாழ் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதியதியாக தான் நியமிக்கப்பட்டதாக நிதிபதி இளஞ்செழியன் தெரிவித்து, யாழ் குடாநாட்டின் குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றங்களின் செயற்பாடு குறித்து ஜனாதிபதிக்கும் ஏனையோருக்கும் தெளிவுபடுத்தினார்.
யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் வழக்குகளையும் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான பிணை மனு தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்கின்ற யாழ் மேல் நீதிமன்றம், பிணை வழங்குவதில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பொலிசாரின் புலனாய்வு விசாரணைகளையும், சமூக நலன்களையும் கவனத்திற் கொண்டு, கருதியும் போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்குவதில்லை.
அத்துடன், யாழ் குடாநாட்டில் தலைவிரித்தாடிய போதைப் பொருள் கடத்தல், வாள்வெட்டு மாணவர் குழு மோதல், வீதிச் சண்டித்தனம், பெண்கள் மீதான தாக்குதல்கள், கோஸ்டி மோதல்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் காணப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் கடும் தண்டனைகளை வழங்கி வருகின்றன. இதனால் யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் குறைவடைந்து தற்போது அமைதி நிலவுகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்களையும், சமூகக் குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, ஒத்துழைத்த யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் சஞிசீவ தரமரத்ன முன்னிலையில் ஜளாதிபதியிடம் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
அத்துடன் யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல் செற்பாடுகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
அதேவேளை, மானிப்பாய் பிரதேசத்தில் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களைத் தாமதமின்றி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் கேட்டுக்கொண்டார்.
போதைப் பொருள் கடத்தல் விடயத்தில் கடற்படையினர் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அத்துடன், விசேட அதிரடிப்படை, பொலிஸ் படை என்பவற்றுடன் இணைந்து கடற்படையினர் கடலோரப் பிரதேசங்களில் கூட்டு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அண்மைக்காலமாக பெருந்தொகையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டிருக்கின்றது. அவற்றைக் கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பியால் டி சில்வா, ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நெடுந்தீவில் இருந்து மன்னார் வளைகுடா வரையிலான கடற்பிரதேசத்தில் கடற்படையின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி நடத்திய இந்தக் கலந்தாலோசனையின்போது வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதியளித்தார்.
யாழ் குடாநாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
சங்குவேலி கொலைச் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள். தலைமறைவாகியுள்ள அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என நீதிபதி இளஞ்செழியனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி முன்னிலையில் பதிலளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உறுதியளித்தார்.
யாழ் குடாநாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமைகள் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான நிலைமைகள், குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பிலான நிலைமைகள் என்பவற்றைக் கேட்டறிந்த ஜனாதிபதி போதைப் பொருள் பானை ஒழிப்பிலும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு இந்தச் சந்திப்பின்போது, விசேட பணிப்புரைகளை விடுத்தார்.
இந்தச் சந்திப்பின் இறுதியில், யாழ்ப்பாண நீதிபதிகளை ஜனாதிபதி சந்தித்தமைக்கும், அப்போது அவர்களுக்கு நீதிபதி வழங்கிய வழங்கிய கௌரவத்துக்கும், போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் உடன் பணிப்புரைகள் பிறப்பித்தமைக்கும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தலைமையிலான நீதிபதிகள் தமது மகிழ்ச்சியையும், கௌரவத்தையும் நன்றியையும் தெரிவித்தனர்.