யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரியில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது சுன்னாகம் பொலிசாரின் அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தினால் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி முதல் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்களால் பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கடந்த 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் தீவிரமடைந்திருந்தது.
உடுவில் பாடசாலை வளாகத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வருகைதந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது கையடக்க தொலைபேசியில் போராடத்தில் ஈடுபட்ட மாணவிகளையும் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்டமை.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் ஆசிரியர்களால் தாக்கப்பட்மை தொடர்பில் கடமையிலிருந்த சுன்னாகம் பொலிசார் உடனடி உரிய நடவடிக்கை எடுக்க தவறியமை மற்றும் முறைப்பாடுகள் பதிவுசெய்வதற்கு மறுத்தமை.
இரவுவேளையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பாதுகாப்பு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்படாமை.
ஆகியன தொடர்பாகவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தினால் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 18 உறுப்புரையின் யின் பிரகாரம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.