2020ம் அண்டாகும் போது இந்த நாட்டின் கடன் சுமையை குறைப்போம். ராஜபக்ஷ குடும்பம் பெற்ற கடன்களை நாங்கள் அடைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று (10) பொரளை கெம்பல் மைதானத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் இவ்வாறு தெரிவித்ததுடன், மேலும் உரையாற்றிய அவர்,
இந்தக் கடன் சுமையை எமது காலத்திற்குள்ளேயே நாங்கள் செலுத்தி முடிப்போம். இவ்றறை நாம் பிரிந்து நிறைவேற்ற முடியாது. நாங்கள் அரசியல் தீர்வை நோக்கி செல்ல வேண்டும்.
அதற்காக நாங்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்குவோம். இது தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானங்கள் இல்லை. புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து தற்போது பேச்சுவார்த்தைகளே இடம்பெற்று வருகின்றன.
பின்னர் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்போம். பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் அதனை சட்டமூலமாக சமர்பிப்போம்.
அனைத்து மதம் மற்றும் இனத்தவர்கள் தொடர்பிலும் நாம் ஆடம்பரம் அடைகிறோம். நாம் அனைவரும் தேசத்தை நேசிப்பவர்கள். ஆனால் சிலர், விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்தவர்களை தேச நேசர்கள் என்கிறார்கள்.
பண்டாரநாயக்க உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் தேச துரோகிகள் என்கிறார்கள். பிரபாகரன் உருவாக்கிய விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்களை தேச நேசர்கள் என்கிறார்கள்.
இப்போது மக்கள் தீர்மானிக்கலாம் யார் தேச துரோகிகள் என்று. அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.