குருநாகல், மாளிகாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து, யாசகர் ஒருவர் மீது காறித் துப்பிய யுவதி ஒருவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர், சரமாரியாகத் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று, சமூக வலைத்தளங்களில் தற்போது உலா வருகின்றன.
சம்பவத்தின் போது, பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், குறித்த யுவதியைக் காப்பாற்ற, பெரும் பிரயத்தனம் காட்டியுள்ளனர்.
இதன்போது, அந்த யுவதியைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் ஒருவர் மீதும், சரமாரியாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெறும்போது, அதனை வீடியோப் பதிவு செய்துள்ள ஒருவர், அதனை சமூக வலைத்தளமொன்றில் பதிவேற்றம் செய்துள்ளார்.
சம்பவத்தின் போது, குறித்த யுவதியின் சகோதரர் என்று கூறப்படும் ஒருவரே, அவரைக் காப்பாற்ற முற்பட்டதாகவும், அதனால், அச்சகோதரர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனக் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில், இதுவரையில் எவ்வித பொலிஸ் முறைப்பாடும் செய்யப்படவில்லை என்று, பொலிஸார் கூறினர்.