மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் எதிர்க்கட்சி எம்பியான தினேஷ் குணவர்த்தன ஆகியோரை விமானநிலையத்தில் வழியனுப்பி வைக்கச் சென்று திரும்பிய போதே இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வழியனுப்பி வைத்துவிட்டு உயர்ஸ்தானிகர் திரும்பியதாக எண்ணியே குண்டர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மலேசிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் குழுக்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன. மஹிந்த ராஜபக்ச விகாரைக்குச் செல்லப் போகிறார் என்ற தகவலின் அடிப்படையில் விகாரை மீதும் விகாராதிபதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எல்.ரி.ரி.ஈ.யினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் உச்சகட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட இவ்வாறான தாக்குதல் சம்பவங்களோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோ மலேசியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாம் விமானத்தில் ஏறுவதற்காகச் சென்று விட்டோம். அதன் பின்னரே அவர் தாக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பான இடத்துக்கு அவர் சென்றிருந்த போதும் அவரைப் பின்தொடர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த விமானநிலைய பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என தினேஷ் குணவர்த்தன எம்பி கூறினார்.எனினும், தாக்குதல் நடத்தியவர்களில் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக இல்லை.
எவ்வாறிருந்தாலும் மலேசிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருவதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் மலேசிய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுக்கும் 56 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறினார்.
எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியோர் தொடர்பில் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு நிதியுதவி வழங்குவதுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணைகளும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலை 4 மணிக்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நால்வர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், ஐவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தூதுவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு வைத்திய நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கவலையடைகிறோம் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென இந்தக் குழுவினருக்கு எச்சரிக்கின்றேன் என நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மலேசிய பொலிஸ் மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் கூறியுள்ளார்.
இதேநேரம், இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, இதனைக் கண்டித்திருப்பதுடன், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.