பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தினுடைய நிலவரம் தொடர்பாகவும், பல்கலைக்கழக நடவடிக்கைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி தொடர்பாகவும் மாணவப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகின்றது.
அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவப் பிரதிநிதிகள் 7 பேர் வரையில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவப் பிரதிநிதிகளால் வடக்கில் தற்போது தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்படுகின்றமை தொடர்பிலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான நிலையில் இருப்பதனையும், யாழ். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தெரிவு முதல் செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் செல்வாக்கு இடம்பிடித்துள்ளமை தொடர்பிலும் தெளிவான முறையில் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இவர்களது கருத்துக்களை தெளிவாகப் புரிந்து கொண்ட அவர்கள் தமது அரசாங்கத்திற்கு இவற்றை எடுத்துக் கூறி அவர்கள் மூலம் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர அழுத்தத்தினை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாணவர்களுடைய பாதுகாப்புத் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் 10 வருடங்களின் பின்னர் என்ன நிலையில் வடக்கு இருக்கும் என்ற வினாவையும் மாணவ பிரதிநிதிகள் மத்தியில் தொடுத்திருந்ததாகவும் அதற்கு அவர்கள் வடக்கு முழுவதும் சிங்களக் குடியேற்றத்தினையே காணமுடியும் எனவும் மாணவர்கள் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானியப் பிரதிநிதிகள் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பலரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அதனடிப்டையில் மாணவப்பிரதிநிதிகளால் துணைவேந்தருடனான சந்திப்பு குறித்து வினவப்பட்ட போது, சுமுகமான நிலையே காணப்படுவதாவும் கற்றல் செய்றபாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்திருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு இவர்கள் நேற்று யாழ். அரசாங்க அதிபர், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி, மற்றும் பல முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.