மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அங்கு விஜயம் செய்திருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்திச் சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை அரசாங்கத்தின் சார்பில், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளதாக, இலங்கையின் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த இருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மலேஷியாவுக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை வழியனுப்புவதற்காக, கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு சென்றிருந்த போதே இவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ எங்கே என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை தூதுவரிடம் வினவியதாகவும், தூதுவர் அளித்த பதிலால் எரிச்சல் அடைந்தே, அவ்விருவரின் மீதும் தாக்குதல் நடத்தியதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் மலேஷியாவுக்கு சென்ற பிரதிநிதிகள் குழுவிலுள்ள எவரும் தாக்குதல்களுக்கு இலக்காகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார, எம்.பியான ஜோன்சன் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உப்பாலி கொடிகார உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அவர்கள், இன்று நாடு திரும்பவுள்ளதாக அறியமுடிகின்றது.