‘பிரபாகரனும் இல்லை மஹிந்தவும் இல்லை’ : ஜனாதிபதி

‘யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால், பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரிவினைவாதக் குழுக்கள், வடக்கிலும் தெற்கிலும் இருப்பதனால், சிற்சில பிரச்சினைகள் எழுகின்றன. வடக்கில், புத்தர் சிலைகள் வைக்கப்படுவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரபாகரனையும் சந்தோஷப் படுத்துவதற்காகவும், தெற்கில் உள்ள இராணுவ நினைவுச்சின்னங்கள் அகற்றப்படுவதாகவும் இக்குழுக்கள் கூறுகின்றன. அவற்றில் எவ்விதமான உண்மையும் இல்லை’ என்றும் அவர் கூறினார்.

தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களில் பிரதானிகளை, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, ஜனாதிபதி பதிலளித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

‘யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதில் நாம் இருப்பதனால், யுத்தக்குற்றங்கள், அபிவிருத்தி, அரசியல், யுத்த காயங்களை ஆற்றுதல் உள்ளிட்ட பல்வேறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய நிலையில் நிற்கின்றோம்.

இவ்விடத்தில், யுத்தத்துக்கு முகங்கொடுத்தவர்களில் பிரபாகரனும் இல்லை, மஹிந்த ராஜபக்ஷவும் இல்லை. அவ்விருவரில், பிரபாகரன் உயிருடன் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இல்லை. இருவரில் ஒருவர் இருந்திருந்தாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டிருக்கவே முடியாது.

நான், புதியவன். என்னுடன் பேசி, பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுகொள்ளலாம். ஆனால், சிலவிடயங்களை, கொஞ்சம் மெதுவாகத்தான் கையாளவேண்டியுள்ளது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்த புத்தர் சிலைகளே, பிறிதோர் இடங்களுக்கு அகற்றப்படுவதாகக் கேள்விப்பட்டேன்’ என்று கூறிய ஜனாதிபதி, ‘பான் கீ மூன், நாட்டுக்கு வரும்போது வடக்கிலும் ஏன் தெற்கிலும், இதனைவிடவும் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என்று எதிர்பார்த்திருந்தேன்’ என்றார்.

‘கடந்த அரசாங்கத்தில் நானிருந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சரொருவர், கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்தார். அங்குச் சென்ற அரச தலைவர், இளநீர் பருகக் கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவுசெய்தார். இந்தச் செயற்பாடானது. கிராமபுறங்களில் உள்ள முச்சந்திகளில், சாரத்தைத் தூக்கிப்பிடித்துகொண்டு, உடல் பலத்தைக் காண்பிக்கும் செயலாகவே நான், அன்று கருதினேன்.

ஐ.நாவுக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு வித்தியாசமானது, நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மூன், வரவேற்றுள்ளார்’ என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ‘அதேபோல, தெற்கில் உள்ள பிரிவினைவாதிகள், இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்றுவதாகக் கூறுகின்றனர். அதிலும், எவ்விதமான உண்மையும் இல்லை. அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது, சிலதை அகற்றவேண்டும். அவ்வாறு அகற்றப்படும் சினைவுச்சின்னங்கள், புதுப்பிக்கப்பட்ட அவ்விடத்திலோ, அல்லது அவ்விடத்துக்கு அண்மையிலோ மீள்நிர்மாணம் செய்யப்படும்’ என்றார்.

‘இவ்வாறான விடயங்களைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு இனவாத நோக்குடன் செயற்படுவதைத் தவிர்க்கவேண்டுமாயின், மதசின்னங்கள் மற்றும் மத ஸ்தானங்களை அமைப்புத் தொடர்பில், கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையைக் கவனத்தில் கொண்டால், தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படாது என உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Posts