அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, 4-1 என தொடரையும் நலுவ விட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது.
இதன்படி டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.
அத்துடன், ஐந்து ஒருநாள் போட்டிகளில் முன்னதாக இடம்பெற்ற நான்கு ஆட்டங்களிலும் மூன்றில் அவுஸ்திரேலியாவும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 5வதும் இறுதியுமான போட்டி கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.
இதில், முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்த அணியின் ஆரம்ப வீரரான தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 39 ஓட்டங்களையும், மென்டிஸ் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.
குறிப்பாக கடந்த போட்டிகளில் இலங்கைக்கு கை கொடுத்த தினேஷ் சந்திமால் ஒற்றை ஓட்டத்துடன் வௌியேறி ஏமாற்றமளித்தார்.
பின்னர் 40.2 ஓவர்கள் நிறைவில், இலங்கை அணி 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதன்படி 196 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸதிரேலிய அணி 43.0 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை விளாசி வெற்றி வாகை சூடியுள்ளது.
அந்த அணி சார்பில் டேவிட் வோனர் சிறப்பாக ஆடி 106 ஓட்டங்களையும் ஜோர்ச் பெய்லி 44 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர்.
எனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி, 4-1 என வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்தப் போட்டியில், ஆட்ட நாயகனான டேவிட் வோனரும், தொடர் நாயகனாக ஜோர்ச் பெய்லியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.