தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு வன்முறைகளை விரும்பவில்லையென குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், உரிமைகளை பெறுவதற்கு இனியும் காலம் கடத்த முடியாதென தெரிவித்துள்ளார்.
யாழ்.தாவடியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அமிர்தலிங்கத்தின் 31ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்-
”கடந்த 1978இல் தமிழர்கள் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை நீக்கி புதிய அரசியல் சானத்தை உருவாக்க வேண்டுமென அனைவரும் கேட்கின்றனர். ஒருமித்த நாட்டில் நீதியான தீர்வை ஏற்க தயாரென நாம் கூறியுள்ளோம். அத்தோடு, அதியுச்ச அதிகார பகிர்வு இடம்பெற வேண்டும். பகிரப்படும் அதிகாரங்களில் சட்டம் – ஒழுங்கு, காணி, பொலிஸ், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தலையீடற்ற வகையில் இறைமைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இவ்விடயங்களுக்காக நாம் பாரிய பொறுப்பை சுமந்து நிற்கின்றோம். மக்களின் அனுமதியின்றி எந்தத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது மக்கள் அமைதியாக இருந்தாலும் தமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.