கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தின் உப்பு அறுவடை, கடந்த 26 வருடங்களுக்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கண்டாவளை பிரதேச செயலர் ரீ.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இவ் வருடம் 800 மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, பலருக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்றய தினம் 8 பேருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக வருமானத்தை ஈட்டித்தரக்கூடியதும் அதிக உப்பினை உற்பத்தி செய்யும் இடமாகவும் அமைந்துள்ள ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள், கடந்த 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக செயலிழந்து காணப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு மீண்டும் அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், ஒரு பகுதியில் மாத்திரமே குறிப்பிடத்தக்க அளவு உப்பு உற்பத்தி இடம்பெற்றது. எனினும் தொடர்ந்த யுத்தம் காரணமாக அதன் செயற்பாடுகள் மீண்டும் பாதிக்கப்பட்டன.
யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஆனையிறவு உப்பளத்தின் உப்பு வயல்களிலும் ஏனைய பகுதிகளிலும் காணப்பட்ட வெடிபொருட்கள் அகற்றப்பட்டு தற்போது மாந்தை உப்பு உற்பத்தி நிறுவனத்தினூடாக உப்பளத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகி ன்றமை குறிப்பிடத்தக்கது.