அற்புதன் நடராஜன் மற்றும் மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகளுடன் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் உறுப்பினர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த, சு.பொன்னையா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினராக தான் கடமையாற்றியதாகவும், தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்திலும் மோசடி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
கடந்த ஆட்சியின் போது பல விடயங்களை வெளிக்கொணர முடியாத சூழ்நிலையில் தான் நல்லாட்சி வந்ததன் பின்னர் பல உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன்.
கொழும்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு சென்றால், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறுகின்றார்கள். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றால் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு சொல்கின்றார்கள்.
இவ்வாறு ஒரு வருடமும் 8 மாதங்களும் கடந்து விட்டன. இந்த விடயங்களை வெளிக்கொண்டு வருவதனால் உயிர் ஆபத்துக்கள் கூட வரலாம். உண்மைகள் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
ஊதயன் பத்திரிகை தாக்குதலின்போது அங்கு இருந்தேன். அந்த தாக்குதலிற்கு இராணுவத்தினரும் உடனிருந்தே செய்தார்கள். நெடுந்தீவில் அரச உத்தியோகத்தர் நீக்கிலஸ் கொலைகள் பற்றியும் பொலிஸாருக்கு அறியப்படுத்தினேன். ஆனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் தற்போதும் இருக்கின்றார்கள். சிலர் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்தால், மேலும் உண்மைகளை அறிய முடியும்.
அந்த தாக்குதலின் போது காயமடைந்த ராஜன் மற்றும் திவாகரன் ஆகியோரை பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள். உதயன் பத்திரிகை மீது தாக்குதல் மேற்கொண்டவர்களும், தாக்குதலை தூண்டியவர்களும் யாழ்ப்பாணத்தில் தான் தற்போதும் இருக்கின்றார்கள் என்றார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை டக்ளஸ் தேவானந்தா மறுத்துள்ளாரே என, கேள்வி எழுப்பிய போது, அவர் இதுவரையும் ஒன்றையும் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொலைகள் மற்றும் வெள்ளைவான் கடத்தல்களுக்கு முக்கிய காரணமானவர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தான்.
அத்துடன் தாங்கள் செய்த கொலையினை விடுதலைப் புலிகள் செய்தார்கள் என விடுதலைப் புலிகள் மீது குற்றத்தினை சாட்டினார்கள் என்றும் அவர் பல திடுக்கிடும் உண்மைகளை ஊடகவியலளர்களுக்கு வெளிப்படுத்தினார்.
இவ்வாறான விடயங்களை வெளியில் கொண்டு வந்ததினால் உயிர் அச்சுறுத்தல்கள் இருக்கலாம் இருந்தாலும் பயப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சினால் எமக்கு வழங்கப்பட்ட 47 ஆயிரம் சம்பளத்தில் 50 ரூபா முதல் 100 ரூபா சம்பளத்தினை தந்துவிட்டு ஏனைய சம்பளத்தினை தாங்கள் எடுத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
எனவே, எமது சம்பளம் வாங்கித்தருமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கிற்கு வந்து செல்வதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தும் பொலிஸார் இதுவரையில் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
நல்லாட்சி அரசாங்கம் கொலை மற்றும் வெள்ளைவான் கடத்தல்கள் உள்ளிட்ட பல சம்பவங்களை உரியவர்களிடம் விசாரணை செய்து குற்றவாளிகளை கைதுசெய்தால், பொது மக்களுக்கு உண்மைகள் வெளிவரும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.