மரணச்சான்றிதழ் பெற்ற 7200 குடும்பங்களும் காணமல்போனோர் சான்றிதழை பெறமுடியும்

தமது உறவுகளைத் தொலைத்த 7200 குடும்பங்கள் மரணச்சான்றிதழைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் காணமல்போனேர் சான்றிதழைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இவ்விடயம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாராளுமன்றத்தில் இறப்புக்களின் பதிவு(தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலம் கடந்த வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திருத்தச்சட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முக்கிய திருத்தமொன்று கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உறவுகளை இழந்து அவர்களை கண்டறிவதற்காக பல்வேறு இன்னல்களை சந்தித்தவாறு அன்றாடம் தேடியலைந்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் யுத்தம் நிறைவடைந்து தற்போது வரையிலான ஏழாண்டு காலப்பகுதியில் அவ்வாறு உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் 7200 பேர் ஏதோவொரு காரணத்திற்காக அவர்களின் உறவுகள் இறந்து விட்டதாக கூறி வழங்கப்பட்ட மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

உண்மையிலேயே தமிழ் மக்கள் இந்தச் சான்றிதழை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. நெருக்கடியான சூழலில் தான் இவ்வாறு மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்திருந்தது.

இந்நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இறப்புக்களின் பதிவு(தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்தில் மரணச்சான்றிதழ் பெற்றவர்கள் தமது சுய விருப்பத்தின் அடிப்படையில் அதனை மீள கையளித்து காணமல்போனோர் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்கள் என்ற திருத்தம் எமது கட்சி சார்பில் என்னால் முன்வைக்கப்பட்டது.

அத்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே மரணச்சான்றிதழை பெற்றுக்கொண்ட எமது மக்கள் அதனை மீளக் கையளித்து காணமல்போனோர் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதற்கு அவர்களுக்கு சட்ட ரீதியான உரித்துடையவர்கள்.

Related Posts