தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்படுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் எதிர்க்காது என தெரிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், எனினும் வெளியேற்றப்பட்டவர்களை மீளக் குடியேற்றுவதாகக் கூறி புதிதாக திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடி யேற்றங்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வட மாகாணத்திற்கான விசேட மீள்குடியேற்ற செயலணி சிங்கள, முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதையும் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைக்கு தமிழர் தரப்பால் கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுவதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் நாடாளுமன்றில் நேற்றைய தினம் பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதை தாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்று கூறியதுடன், புதிதாக சிங்கள, முஸ்லீம் குடியேற்றங்களை மேற்கொள்வதையே எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கு இனவாத சாயம் பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.