வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை வடமாகாண மக்களிற்கு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் சேவையொன்று இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பருத்துத்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு 28ஆம் திகதி காலை10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறவுள்ளது.
மேலும் இந்நடமாடும் சேவையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் பங்கு பெறுவதுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால் பின்வரும் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இதன்போது சர்வதேச தேவைகளுக்காக ஆவணங்களை சான்றுறுதி படுத்துவதற்கான தேவைகளை உடைய பொது மக்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டலும் வழங்கப்படவுள்ளன.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பிறப்பு, விவாகம் மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், கடவுச்சீட்டு சம்பந்தமான வழிகாட்டல்கள், இரட்டை பிரஜாவுரிமை மற்றம் குடியுரிமை பெறுதலுக்குரிய நடவடிக்கைகள் குறித்து இந்நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயனடையுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.