இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் இலங்கையணியின் உப தலைவர் தினேஷ் சந்திமால் தவறவிட்டுள்ளார்.
குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, திலகரட்ன டில்ஷான் ஆகியோருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து அரைச்சதங்கள் பெற்றிருந்த சந்திமால் இப்போட்டியில் அரைச்சதம் பெற்றால் அவர்களின் சாதனையை முறியடிக்கலாம் என்ற நிலையிலேயே, அடம் ஸாம்பாவின் பந்துவீச்சில் எல்.பி.டபில்யு முறையில் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்தில் இடம்பெற்றிருந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இறுதி நான்கு போட்டிகளிலும் அரைச்சதம் பெற்றிருந்த சந்திமால், இத்தொடரின் முதலாவது போட்டியிலும் அரைச்சதம் பெற்றிருந்தார்.
ஓட்டுமொத்தமாக இப்பட்டியலில் ஒன்பது அரைச்சதங்களுடன் ஜாவீட் மியான்டாட் முதலிடத்தில் காணப்படுகின்றார். மார்க் வோ, கேன் வில்லியம்ஸன், மொஹமட் யூசுஃப் , அன்ரூ ஜோன்ஸ், ஆசிஃப் இக்பால் ஆகியோர் ஆறு அரைச்சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர்.