வட மாகாணத்தின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட விடயங்களில் தன்னிச்சையாக செயற்படாமல், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவற்றை செயற்படுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதனை விடுத்து தெற்கின் எடுபிடிகளாக தம்மை மாற்ற நினைப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வட மாகாண அபிவிருத்தித் தேவைகளின் கணிப்பு பற்றிய கூட்டத்திலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தேவைகள் குறித்து புதிய கணிப்பொன்றை நடத்துவது அவசியமானதென குறிப்பிட்ட விக்னேஸ்வரன், வட மாகாண சபையையும் உள்ளடக்கியே குறித்த கணிப்பை நடத்தவேண்டுமென குறிப்பிட்டார். குறித்த கணிப்பின் ஊடாக போரினால் உண்டாக்கப்பட்ட பௌதீக மற்றும் மனோரீதியான பாதிப்புக்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்திப்பதற்கான செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு பொருத்தமான தொழிற்துறைகள், வேலைவாய்ப்பு போன்றவற்றை உருவாக்குவதோடு சகல மக்களையும் உள்ளடக்கியவாறான ஒரு அபிவிருத்தியையே எதிர்பார்ப்பதாக வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜெனீவா பிரேரணையை கவனத்திற்கொண்டு, போர்க்குற்ற விசாரணைகள் முறையாக நடைபெற வேண்டுமெனவும் அதிகாரப் பரவலாக்கல் நன்மை பயப்பதாக அமையவேண்டுமென்றும் அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இதன்போது வலியுறுத்தினார்.